வாசகர்களின் விமர்சனங்கள்
1. செல்வன் எம். எஸ். விக்னேஷ் (என் மகன்) – உயர்நிலை நான்கு

2. திரு கே.வி. ராஜா
ரயிலில் ஏறி சிறிது நேரத்தில் படிக்கத் தொடங்கி இப்போது மொத்தப் புத்தகத்தை முடித்துவிட்டு உங்களுக்கு மின்னஞ்சல் எழுதிக்கொண்டிருக்க முதல் காரணம் அந்தப் பச்சைபெல்ட் தான். ரியாத்தில் வசித்த பதினாலு வருடங்களில் தவிர்க்க இயலாமல் மரண நிகழ்வுகளில் கலந்துகொள்ள இயலாமல் போன பலரைப் பார்த்ததால் ஏனோ என் மனதுக்கு நெருக்கமான கதையாக பச்சைபெல்ட் அமைந்துவிட்டது. ஆண்பார்வையில் கதை எழுதும்போது உங்களுக்குள் ஒரு சந்திரமுகன் வந்து உட்கார்ந்துகொள்கிறானோ என்ற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. பச்சைபெல்ட் வசனங்கள் பெரும்பாலும் சேவல்பண்ணை (பேச்சிலர் அக்காமடேஷன்) பேச்சுகள், பிசிரில்லாமல் கொடுத்துள்ளீர்கள். அதுபோலவே மாலனுக்குப் பிடித்த ஆறஞ்சு சிறுகதை. கதையைப் படிக்கும்போது உங்கள் மகனில் என்னை உணர்ந்தேன். அதிலும் கணக்கு கேள்விகள், ரகளை.பொழுதின் தனிமை இன்றைய பெரியவர்களின் தனிமையையும் அவர்களது அங்கிகாரத் தேடல்களையும் மெலிதாகச் சொல்வதோடு பேஸ்புக் லைக் மனநிலையையும் நகைச்சுவையாகச் சொல்கிறது, கூடவே தலைமுறை இடைவெளியையும். அலையும் முதல் சுடர் ஒரு வித்தியாசமான முயற்சி. அவன் அவள் அவர்கள் சிங்கை நகரத்தில் ஒரு வீட்டிற்குள்ளேயே தனித் தனி வாழ்க்கை வாழ்பவர்களின் நிலையை அழகாகச் சொல்கிறது. பெயர்த்தி கதை மாணவர்கள் மேடையில் வாசித்தாலும் கதையாகப் படிக்க இன்னும் அழகு. எதிர்பார்த்த முடிவு தான் என்பதால் பெரிய சுவாரசியம் இல்லை. உங்கள் கதைகளைப் படிக்கும்போது ஒரு விஷயம் சொல்லத் தோன்றியது. செஸ் விளையாட்டில் எண்ட் கேம் (end game) என்பது மிக சுவாரசியமான ஒன்று. எண்ட் கேம் சரியாக ஆடத் தெரிந்தவருக்கே வெற்றி. உங்களது பல கதைகளில் தொடக்க விறுவிறுப்பு போகப் போகக் கொஞ்சம் தடுமாறி கடைசியில் கொஞ்சம் தொய்வாக முடிப்பது போல தோன்றுகிறது. அதைக் கொஞ்சம் சரி செய்தால் கதைகள் இன்னும் மெருகேறும். நான் எழுதும் ஆர்வத்தில் இருந்த காலங்களில் எழுத்தாளர் பா. ராகவன் எனக்குச் சொன்ன அறிவுரை இது. “கதையை எழுதிடு, பிறகு வாய்விட்டுப் படி. திரும்பத் திரும்ப வாய்விட்டுப் படி, எங்கெல்லாம் இடருதோ அங்கேல்லாம் எடிட் பண்ணு, திரும்பப் படி. இது மாதிரி தொடர்ந்து செய்தா கதை கரெக்ட்டா கச்சிதமா கைல உட்காரும்” என்பார். நான் ஒரு சோம்பேறி, எழுதுவதையே நிறுத்திவிட்டேன், நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்யலாம். மொத்தத் தொகுப்பில் எண்ட் கேம் சரியாகக் கையாளப்பட்ட கதைகள் பச்சைபெல்ட் & ஒற்றைக்கண். அடுத்தடுத்தத் தொகுப்புகளில் இந்தக் குறை நீங்கும் என்று நம்புகிறேன். உங்கள் இலக்கியப்பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.3. திரு நிஜாம் இன்றைய பாதாம் தீவுப்பயணம் எப்பொழுதும் போல இல்லை! காற்றை மட்டும் உள்வாங்கி திறந்தவெளிப்படகில் பயணம் செய்யும் நான் இன்று உங்கள் கதைகளை உள்வாங்கிச் சென்றேன்!
காற்றைப் போலவே உங்களின் எழுத்தும் தென்றலாய், அனலாய், ஈரப்பதமாய் உங்கள் கதைகளில் வீசியது. எல்லா கதைகளிலும், வாசகனாய் உங்கள் எழுத்தின் கரம் பிடித்து கதை மாந்தர்களுடன் நானும் ஒரு நிகழ்வாய் நடந்தே வந்தேன்; அலையும் முதல் சுடர் இதற்கு விதிவிலக்கு!
உங்களின் குணத்தைப் போலவே உங்கள் எழுத்திலும் எள்ளலையும், எழுச்சியையும் காண முடிகின்றது! எழுத்தாளராய் என்னை கவர்ந்து விட்டீர்கள்! ஒற்றுப்பிழை பல இடங்களில் இருப்பதாக எனக்குப் படுகின்றது; தமிழ் அறிஞர் யாரிடனும் திருத்தம் செய்யச் சொல்லலாம்! உறவு மயக்கம், அலையும் முதல் சுடர் – இந்த இரண்டு தலைப்பும் கதையை தாங்கி பிடிக்கவில்லை! தொடர்ந்து படையுங்கள்..!
4. திரு சிவானந்தம் நீலகண்டன்
திரு.சிவானந்தம் நீலகண்டனின் ‘ஆறஞ்சு’ விமர்சனம்
5. திரு இளங்கோவன் கோவிந்தராஜன்
என்னதான் நாம வாழ்க்கையில ஓடிக்கிட்டே இருந்தாலும்,எப்பவாவது எங்கேயோ எப்பவோ நாம படிச்ச கதை நம்ம மனசுல ஒரு சுத்து சுத்திவிட்டு போகும். அதுமாதிரி கதையில இதுவும் ஒன்னு! தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தம் இல்லாதமாரித்தான் இருக்கும்.ஆனா ஆராஞ்சிப் பார்த்தா தான் தெரியும்…”ஆறஞ்சு” தலைப்பு ஏன் வச்சாங்கன்னு. பார்க்கப் போனா ரொம்பச் சின்ன கதைதாங்க. ஆனா சொன்ன விசயம் ரொம்பப் பெருசு. அரசாங்க லெவல்ல பேசப்படுற விசயத்த செம்ம அசால்ட்டா கையாண்டிருக்கிறாரு,இந்த எழுத்தாளர். பிரைமரி 5 ம் 6 ம் நம்ம நாட்டுல எவ்வளவு முக்கியமா கருதப்படுதுன்னு எல்லாருக்கும் தெரியும். அதுவே அந்த விசயம்,ஒரு மாணவனோட மனசுல எப்படிப்பட்ட பதிவா இருக்கும்னு படம் புடிச்சி காமிச்சமாரி அழகா சொல்லிருக்காரு.கதை ஆரம்பிக்கிறப்பவே அவன் கனவை, அவன் ஆழ்மனச ,அந்த பயத்தை, இப்படி காமெடியா சொல்லுவாருன்னு நெனக்கல. அந்த மாணவன் கனவுல 1,2 சொல்லும்போது கூட 5ம் 6ம் சொல்லாம விடறதா சொன்ன இடம்..நச்! கணக்கை ஏன் தப்பா சொன்னோம்னு நினைக்கிற அவன் வெகுளித்தனத்தையும் அடுத்த வரில சொல்லி கலங்கடிச்சிட்டார். மேலோட்டமா படிச்சா..என்ன பெருசா நடந்து போச்சு…5ம்6ம் சொல்லல. அவ்ளோதானன்னு நெனைக்கத் தோணும். 5ஐயும் 6ஐயும் நம்பரா பார்த்தாலே நடுங்கிக் கிடக்கிற ஆழ்மன பய உணர்வு ..கொஞ்சம் கொஞ்சமாத்தான் நம்ம மனசுக்குள்ள ஊடுருவும். அடுத்ததா மத்த வீட்டுப் பிள்ளைகளோட ஒப்பிட்டுப் பேசுற சராசரிக் குடும்பங்களைச் சாடுற விதத்திற்கு ஒரு சபாஷ் போடலாம்.5 ,6 வருஷக் கதையாயிருந்தாலும் வளவளன்னு இழுக்காம எவ்வளவு தேவையோ அத அளவறிஞ்சிக் வந்திருக்கு இந்த ஆறஞ்சு.சில விசயங்கள மென்மையா சொல்லிருக்காரு..அது இந்த கதைய அழகூட்டிருக்குன்னுதான் சொல்லணும். உதாரணத்திற்கு இவன் பிரைமரி 5 படிக்கும் போது இவன் தம்பி பந்து எடுத்துக்கிட்டு,சிரிச்சிக்கிட்டே வெளையாடப் போகும்போது,கோவப்பட்டதாயும் அப்புறம் இவன் தம்பி பிரைமரி5 படிக்கும்போது,இவன் சிரிக்காம அறையைக் கடந்து போவதாயும் கதையைக் கொண்டுபோன விதத்திலயே..தெரிஞ்சி போச்சு,சிறுகதையின் ஆளுமையை நல்லாப் புரிஞ்சி எழுதியிருக்காரு.மொத்தத்தில இந்தக் கதையை நீங்க படிக்க நான் பல காரணங்கள் சொல்லலாம்..எனக்குப் புடிச்ச காரணம்..தலைப்புதாங்க..ஆறும் அஞ்சும்…”ஆறஞ்சு” எழுத்தாளர் : அழகு நிலா6. திரு மாமன்னன் (தி சிராங்கூன் டைம்ஸ், பிப்ரவரி 2017 இதழில் வெளியானது) பட்டியலுக்குள் அடங்கும் சொற்கள்
ஆறஞ்சு 2015ல் வெளியான சிறுகதைத் தொகுப்பு. ஆசிரியர் அழகுநிலா. பதினான்கு கதைகள் உள்ள இத்தொகுப்பில் ஒரு கதையைத் தவிர மற்ற கதைகள் சிங்கப்பூர்பிரச்சனைகளைப் பற்றிப் பேசுகின்றன. ‘அலையும் முதல் சுடர்’ என்ற அந்த ஒரு கதை மகாபாரதப் பின்னணியில் இருக்கிறது. இது வேறு எதையும் மறைமுகமாகக் குறிக்கும் குறியீடா என்பது விளங்கவில்லை. மற்ற கதைகளில், சமகாலத்தில் அனைவருக்கும் பரிச்சயமான, பரவலாகப் பேசப்படும் சிங்கப்பூர் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அவற்றைச் சிறுகதைகளாக ஆக்க முயற்சித்திருக்கிறார்.
கதைகள் பேசும் பிரச்சனைகளை இப்படிப் பட்டியலிடலாம்;

சில தேர்தெடுத்த கதைகளின் விமர்சனங்களை மட்டும் இப்பொழுது பார்ப்போம்.
இந்தியாவில் வாழும் தன் தந்தையின் இறப்பிற்குக்கூடப் பொருளாதாரகாரணங்களினால் போக முடியாத சிங்கப்பூரில் பனிபுரியும் மகனின்கதை ‘பச்சை பெல்ட்’. பத்து வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் வீட்டில் நடப்பதாகக்கதை அமைந்திருக்கிறது. அந்த வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக்கதையை எழுதியிருப்பாரோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு இயல்பாகவும் தத்ரூபமாகவும் விவரிப்புகளுடன் கதை நகர்ந்து செல்கிறது. கதையில் வரும்பரமசிவம் அண்ணணும், சண்முகமும் அந்த பச்சை பெல்ட்டும் நம்முடன்ஒட்டிக்கொண்டு செல்ல மறுக்கிறார்கள். சண்முகம் அவன் தந்தை கேட்டு இவன் வாங்கித்தராமல் விட்ட அந்த பச்சை பெல்ட்டைப் பார்த்து வெடித்து அழும் பொழுது,அவன் வேதனையை ஒரு வாசகனிடம் கடத்தி விடுகிறார் ஆசிரியர். அதுவேஇக்கதையின் வெற்றி என்று தோன்றுகிறது. இத்தொகுப்பின் ஆகச்சிறப்பான கதை இது.
மகனால் புறக்கணிக்கப்படும் ஒரு தாயின் கதை ‘பெயர்த்தி’. இந்திய பெண்ணான உமை, ஒரு சீனரைத் திருமணம் செய்துகொள்கிறார். அன்பான கணவன்மனைவியாக வாழும் அவர்களுக்கு பிறக்கும் மகன் முழுக்கவும் தந்தையின் உருவம் மற்றும் நிறத்திலேயே இருக்கிறான். தாயின் நிறத்தைக் கண்டுவீட்டுதவிப்பெண்ணா என்று கேட்டுவிடும் நண்பர்களுக்கு பயந்து உமையைப்புறக்கணிக்கிறான். பின்பு வளர்ந்து திருமணமாகி, தனக்கு குழந்தை பிறந்தவுடன்மனம்மாறித் தன் அம்மாவை உடனே மருத்துவமனைக்கு அழைக்கிறான். அங்குஉமையின் பெயர்த்தி அப்படியே தன் பாட்டியை உரித்துவைத்திருக்கிறாள்.இக்கதையில் உமையின் உணர்ச்சிகளையும், தவிப்பையும், தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றுக்காகத் தான் புறக்கணிக்கப்படும் வேதனையும் மிக அழகாகக்காட்டியிருக்கிறார். உமையின் பெயர்த்தியைக் ‘கருப்புரோஜா’ என்று ஒருசொல்லால் கதையை மிக நெருக்கமாக்கி விடுகிறார்.
பூக்கட்டும் சண்முகத்திற்கும், பணிப்பெண்ணான செல்விக்கும் ஏற்படும் காதலே‘புது மலர்’. ஆசிரியருக்கு எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டுவது மிக அழகாக வருகிறது. சண்முகத்தின் அம்மா பூக்கட்டுவதை ஒரு தவம்போல செய்வதாகட்டும், ஒவ்வொரு பூவையும் ஒவ்வொரு ஸ்டைலில்கட்டுவதாகட்டும், அவர்கள் தம் பணியில் காட்டும் அர்ப்பணிப்பைத் துல்லியமாகக்காட்சிப்படுத்துகிறார். ஒரே நெருடல், இறுதியில் செல்வி ஒரு விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பிழைப்பாளா மாட்டாளா என்ற நிலையில்கதை முடிகிறது. எளிய மனிதர்களைப் பற்றிக் கதை அமைக்கும் போது கடைசியில்அழுகையுடன்தான் முடிக்க வேண்டும் என்பது நியதியோ?அன்றாடங்காய்ச்சிகளுக்கும் சந்தோஷமான வாழ்க்கை இருக்கிறது என்பதைஆசிரியர் மனதிற்கொண்டிருந்தால் கதை இப்படி முடிந்திருந்திருக்காதோ?
சிங்கப்பூரில் திசுத்தாள் மூலம் பொது உணவங்காடிகளில் அமர இடம் பிடிக்கும்கலாச்சாரத்தால் பாதிப்படைந்து உருவாக்கப்பட்ட சிறுகதை என்ற தோற்றம்அளிக்கிறது ’சிதறல்கள்’. கதாநாயகனின் மேலதிகாரி கோபப்பட்டு பத்தே நிமித்தில்மூச்சிரைக்கிறார். உணவங்காடியில் ஒரு பெண் சண்டையிட்டு ஐந்தே நிமிடத்தில்மூச்சிரைக்கிறார். கடைசியாகக் கதாநாயகன் கீழ் வீட்டாரிடம் பத்தே நிமிடத்தில்மூச்சிரைக்க சண்டையிடுகிறார். இவை அனைத்தும் வெள்ளிக்கிழமை தவறுதலாககண்ணாடி உடைந்தால் நடப்பது என்று மனைவி சொல்லியதை நம்பும் நிலைக்கு வந்துவிடுகிறான் கதாநாயகன். மீண்டும் மனைவி அவை தற்செயல்களே என்று தெளிவுபடுத்தியவுடன் சமாதானமடைகிறான். கதையைப் படித்த பின்பு நமக்கும்கொஞ்சம் மூச்சிரைக்கிறது. சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்லும் அம்சங்கள் ஏதும் கதையில் தென்படவில்லை.
தலைப்புக் கதையான ‘ஆறஞ்சு’ சிங்கப்பூரில் பிஎஸ்எல்இ பரிட்சை தொடக்கப்பள்ளி இறுதியாண்டு மாணவர்களுக்குத்தரும் – குறிப்பாகப் பெற்றோர்கள் மூலம் – கடும் அழுத்தம் பற்றியது. சிங்கப்பூர் பிரதமரே அடிக்கடி இப்பிரச்சனையைப் பேசுகிறார்.பிறகு புனைவில் பேசாவிட்டால் எப்படி? பி.எஸ்.எல்.இ தேர்வுக்குத் தயாராகிறான்விக்கி. கணக்கு சுத்தமாக வரவில்லை. சுஜாதா என்ற பெண்ணுடன் ஒப்பிட்டுவிக்கியின் அம்மா படுத்தும்பாட்டை விவரிக்கிறது இக்கதை. இக்கதையில்விக்கியின் தம்பியாக வரும் ராகுல் அடிக்கடித் தலையை நீட்டி விக்கியைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டேயிருக்கிறான். ஒருகட்டத்தில் அவனும் பிஎஸ்எல்இ க்குத் தயாராகக் கஷ்டப்படும்போது விக்கி பதிலுக்கு அவனைப் பார்த்துச் சிரிக்கவில்லை என்று கதை முடிகிறது. இப்படியான முடிவே வாசகரைத் தொட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பில் எழுதப்பட்ட கதையாகத் தெரிகிறது. ஆனால் கதை எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.
‘உறவு மயக்கம்’ கதை வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணைப் பற்றியது.ஃபிளாஷ்பேக் முறையில் சொல்லப்பட்ட கதை. கதையின் நாயகி அரசி, காலையில்எழுந்து தன் மகனை வருடிவிட்டு, ஜன்னல் வழியாக வெளியே பார்த்து, ஆறுவருடங்களுக்கு முன் சிங்கப்பூர் வந்ததை நினைத்து, வேலைக்குப் போனதைநினைத்து, சொந்தமாக வீடு வாங்கியதையும் நினைத்து தன் வரலாற்றை நமக்குச் சொல்லிவிடுகிறார். பின்பு காபிபோட்டு குடிக்கும் பொழுது தன் தாயிடம் இருந்துஅழைப்பு வருகிறது. தன் மகன் விக்கியை அடித்த பணிப்பெண்ணை விசாரிக்காமல்கோபப்பட்டு வேலையிலிருந்து நிறுத்திய கதையைத் தாயிடம் சொல்கிறாள். பின்புபணிப்பெண் கோமி அழைத்து விக்கியை அடித்ததற்கான காரணத்தை முழுமையாகச் சொல்லும் பொழுது தன் அவசரபுத்திக்காக மனம் வருந்துகிறார்.இக்கதையைப் பணிப்பெண் கோமி பார்வையில் சொல்லியிருந்தால், அவள்பின்புலத்தையும் அவள் சூழ்நிலையும் விளக்கியிருந்தால் நம் மனதைத் தொட்டிருக்கக்கூடும். ஒரு முதலாளிப் பெண்ணின் பார்வையில் விரிந்த கதை ஒருசிறு அதிர்வைக் கூட ஏற்படுத்தவில்லை. அதோடு இப்படித்தான் ஏதும் நடக்கும் என்று ஓரளவுக்கு ஊகிக்கவும் முடிகிறது. எல்லாமே விளக்கப்பட்டுவிடுவதால் வாசிப்பில் சலிப்பும் எழுகிறது.
‘ஒற்றைக்கண்’ ஓர் அன்பே உருவான மனைவி, முன்கோபி கணவன் இருவரிடையே வயதான காலத்தில் நடக்கும் கதை. முந்தைய தலைமுறையில் இந்த காம்பினேஷன் நிஜத்திலும் திரைப்படங்களிலும் பார்த்துச்சலித்த ஒன்றே. எதற்கெடுத்தாலும் கோபப்படும் கணவர், வீட்டில் பூனையைக் கண்டுகோபப்பட்டு பேப்பர் வெயிட்டால் அடிக்கும்போது எதிர்பாராமல் மனைவியின் ஒருகண்ணில் பட்டு பார்வை போய்விடுகிறது. ஆனாலும் விபத்துதானே என்று மனைவிக்கு அவர்மேல் கோபமில்லை. திடீரென்று அம்மா இறந்து விடஅப்பாவைப் பார்க்க வரும் மகள், தன் அப்பா ஒரு பூனையிடம் பாசமாகபேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து நிற்கிறாள். இதுவும் பழையபாணி முடிவே. ஆர்.கே.நாராயணின் மால்குடி டேய்ஸில் கிட்டத்தட்ட இதைப்போலவே முடியும் ஒரு கதையை வாசித்த நினைவுண்டு.
சாராம்சமாகச் சொன்னால், கதைகளின் கரு சாதாரணமாக இருக்கும்போதும், மொழியும் நடையும் விறுவிறுவென்று வாசகரைப் படிக்கவைக்கிறது. அதே போல எளிய மக்களின் வாழ்க்கையை மிக அழகாகக் கண்முன் நிறுத்தும் கலையும் ஆசிரியருக்குக் கைவந்துள்ளது. இந்தத் தொகுப்பில் ‘பச்சை பெல்ட்’ அளவுக்கு மற்ற கதைகள் நம்மைத் தொட்டு, ஊடுருவி, உள்நுழைவதில்லை. எனினும் ஒரு சிறுகதைத்தொகுப்பில் ஒரேயொரு கதை நம் அகம் தொட்டு என்றைக்கும் நினைவில் நீளும் ஒன்றாக இருந்தாலும் அத்தொகுப்பு வெற்றியடைந்துவிட்டது என்பது என்எண்ணம். அவ்வகையில் ஆறஞ்சு தொகுப்பை வெற்றி பெற்றதாகவே சொல்லுவேன்.
சடாரென்று புலப்படாத சமூகச்சிக்கல்களை வெளிக்கொணர்ந்தோ அல்லது அனைவருக்கும் பரிச்சயமான சிங்கப்பூரின் வாழ்வியல்பிரச்சனைகளை மேலோட்டமாக இல்லாமல், ஆழமாகவும் உளவியல் நுணுக்கங்களோடும் அணுகியோ தனக்கு வசப்பட்டிருக்கும் மொழியின் துணையுடன் நீண்ட பயணம் ஆசிரியருக்குக் காத்திருக்கிறது.ஆசிரியரே பின் அட்டையில் கூறியிருப்பது போல, சிங்கப்பூரின் வேர்களை விரைவில் ஊடுருவி அறிந்து வாசகர்களுக்குப் படைத்திட வாழ்த்துக்கள்.
7. Mr Dinuraj
I had read a couple of Azhagunila’s short stories previously in other compilations of Singapore Tamil short stories. So, I was very excited when I found out from a friend that she had her own compilation of short stories!
In this book you will find various aspects of Singapore life, from the vantage of different people in our society, from a PSLE facing kid (Aaranju), to an immigrant worker (Pachai Belt). Other gems include Alayum Muthal Sudar, which is a retelling of Dharman’s story in Mahabaratham from another perspective.
My favourite story is Peyarthi. The tale of a Tamil woman, who has married a Chinese man, and her relationship with her son, who looks Chinese. In a space of just seven and a half pages, it is incredible how Azhagunila captures so many intricacies of our society, of identity, inherent prejudices, casual racism, and acceptance.
Azhagunila handles people, relationships, and emotions very skillfully in her stories. Her stories stand out for two reasons. First is the impact when you read the story. Second is how it stays with you, and you think about it days, weeks, months after you had read it. Before reading this book, I had thought Azhagunila probably would be my favourite Singapore Tamil author. Having read it, now I know that for sure.