
அணிந்துரை
அழகுநிலா ஆரம்பத்தில் பத்தி எழுதுகையில் வாசித்திருக்கிறேன். சில கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். பிறகு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், ஃபேஸ்புக்கிலும் தென்பட ஆரம்பித்தார். வாசகர் வட்டம் வந்தபிறகு நட்பு வளையத்திற்குள் வந்து சேர்ந்தார். இவருடைய சிறுகதைத் தொகுதியை வெளியிடுவதற்கான நிமித்தங்கள் வால் நட்சத்திரம் போல அவ்வப்போது தோன்றினாலும் இப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உலகில் இன்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பு ஆறஞ்சு என்ற பெயரோடு……
என்னைவிட தகுதி வாய்ந்த பலபேர் சிங்கப்பூர் இலக்கியத்தில் பரவலாக இயங்கிக் கொண்டிருந்தாலும் நான்தான் அணிந்துரை தர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாக சொன்னபிறகு சரித்திர ரீதியான அந்தக் காரணத்தை நான் கேட்கவேயில்லை.
இத் தொகுப்பிலுள்ள சிறுகதைகளில் அழகுநிலாவின் உரைநடை, இசைவான எளிமையான, வாசிப்பவரை சுலபத்தில் ஈர்க்கக் கூடியவைகளை, அவ்வளவாக அலங்காரங்கள் இல்லாத அதே நேரம் கதைக்குத் தேவையான அர்த்தத்தைத் தரும் விதத்தைப் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.
திருமதி சாந்தினி முத்தையாவை சமீபத்தில் சந்தித்தபோது ‘நீண்ட நாட்களாகிவிட்டது சந்தித்து. எங்கே போய்விட்டீர்கள்?’ என்று கேட்டேன். இந்த வருடம் பி.எஸ்.எல்.இ என்றார். சிங்கப்பூரில் பி.எஸ்.எல்.இ படுத்தும் பாடு சொல்லி மாளாது. கதை என்பது வாழ்வை அதற்குத் தெரியாமல் படம் பிடிப்பது என்கிறார் அமெரிக்க எழுத்தாளரான சாங்பெல்லோ. வாழ்வின் சிக்கல்கள், நெருக்கடிகள், தவிப்புக்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் மனிதர்கள் போராடுகிறார்கள். எழுத்தாளன் வாழ்வை நுண்மையாக அணுகி பதிவு செய்கிறான். அதனால் அந்த அனுபவம் வாசிப்பவருக்கு சொந்த அனுபவம் போல மாற்றப்படுகின்றது.
ஆறஞ்சு கதை சுய அனுபவமாகவோ அல்லது வேறு மனிதர்களின் அனுபவமாகவோ அல்லது உளச்சிக்கல் என எதுவாகவோ இருக்கலாம். அது எப்படி ஒரு சிறு கதையாக உருக் கொள்கிறது என்பதே முக்கிய சவால். பள்ளிக் குழந்தைகளின் மனநிலையைப் பளிச்சென்று மனதில் தைக்கும் விதத்தில் சித்தரிக்கப்பட்ட கதை. அழகுநிலாவின் இடத்தை இப்படிப்பட்ட கதைகளே நிலைநிறுத்தும்.
பச்சை பெல்ட் இறந்துபோன தந்தையின் நினைவுகளில் வாடும் மகனைப் பற்றியது. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கதை நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. நினைவோட்டமாக அப்பா பச்சை பெல்ட் வழியே வருவது பிரஞ்சு எழுத்தாளர் மார்சல் புருஸ் தனது இறந்துபோன தாயைப் பற்றி இப்படி எழுதியிருப்பது நினைவுக்கு வருகின்றது.
மனித வாழ்க்கை அல்லது மனித நடத்தையின் ஏதோ ஒரு கூறின் மீது ஒளி பாய்ச்ச முனையும்போது கதை விளக்க இலக்கியமாக ஆகிவிடும். வேர்க்கொடி கதையில் நல்ல வேளையாக ஓர் ஆழ்நோக்கை அளித்து தப்பித்துக் கொண்டார்.
கதைகளில் காலத்தை விட முக்கியமானது இடம், இடத்தைச் சொன்னால்தான் கதை மாந்தர்கள் மீது நம்பிக்கை வரும் என்று யூடோரா வெல்டி என்ற பிரஞ்சுக் கதாசிரியை கூறுவார். சிங்கப்பூர் கதைகள் என்று அடையாளப்படுத்துவதற்காக கதையை எழுதிவிட்டு எம்.ஆர்.டி, சிராங்கூன் ரோடு, செந்தோசா என்று ஆங்காங்கே அள்ளித் தெளித்துவிட்டு நகரும் கதைகள் போல் அல்லாமல் யதார்த்தமான, நிஜமான சிங்கப்பூர் பிம்பங்களுடன் நகர்த்திச் செல்லும் கதைகளாக இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள் இருந்தாலும் சுடோக்கு, புதுமலர்கள், பெயர்த்தி அதிக ஸ்கோர் பண்ணுகின்றன.
ஒருங்கிணைவு (கோ இன்ஸிடென்ட்) கதை சிதறல்களில் தற்செயல் நிகழ்வுகளை பாத்திரமாக்கி தொய்வில்லாமல் எழுதியிருப்பது அருமை. அவன் அவள் அவர்கள், உறவு மயக்கம், தோன்றாத் துணை கதைகள் வாழ்வை சரியாக எடுத்துக்காட்டி ஒரு கூர்மையான நன்கு பிரித்தறிகின்ற எதிர்வினையை அளிக்கத் தூண்டுகின்றன.
இதிலுள்ள சில கதைகளை கதைக்கருவை அடிப்படையாக வைத்து எழுதியதாக அழகுநிலா என்னிடம் குறிப்பிட்டார். சிறுகதை எழுதுவதையும் அல்லது படைப்பாற்றலையும் அப்படிப்பட்ட பயிற்சியினால் வசப்படுத்த முடியுமா என்ன? படைப்புக்கள் உருவாவது ஓர் அகத்தெழுச்சி என்று ரொமாண்டிக் கொள்கை சொல்லிவருகின்றது. உள்ளத்தில் குறையாத உத்வேகம் இருந்தவாறு இருக்க வேண்டும். எழுத வேண்டும் என்ற வேகம், கனவு, உள் மன வேதனை ஒவ்வொன்றும் உருவாக்கும் நிர்ப்பந்தம்தான் கதைகளை உருவாக்குகின்றன என்று நான் சொல்வேன். இவற்றை முதலில் தெளிவுபடுத்தி இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமானால் இந்த எழுத்துப் பயிற்சி உதவக்கூடும்.
அதீதப் புனைவு கதையாக எழுத முயற்சி செய்துள்ள அலையும் முதல் சுடரில் சம்பவங்களையும் பாத்திரப் படைப்புக்களையும் சரியாக ஒட்டிக் கொள்ளும் வகையில் அழகுநிலா எழுதியிருப்பதை வாசிக்கும்போது புனைவின் சவால்களை வலியச்சென்று சந்திக்கும் அவரின் படைப்பூக்கத்தை உணர்கிறேன்.
பொதுவாக சிங்கப்பூர் சமகால வாழ்விற்கு நெருக்கமான கதைகள் பனித்துளியில் ஆகாசம் ஒளிர்வதைப் போல வாழ்வின் சிக்கல்களை தன்னளவில் அடையாளம் காட்டும் கதைகள் கொண்ட தொகுப்பாக இதைக் குறிப்பிடலாம். எது நல்ல கதை என்ற எளிமையான கேள்விக்கான பதில் எந்தப் படைப்புக்களிலும் கிடைத்துவிடாது. இதில் பொதுவான காரணிகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன். மற்றபடி பெரும்பாலும் வாசிக்கும் ரசனை, நுட்பம், தங்கள் அனுபவம் சார்ந்து தீர்மானிக்க வேண்டியது வாசகர்கள்தான்.